Tuesday, December 20, 2011

வாட்டர் [2005]

ந்த படம் எடுத்த தீபா மேத்தாவுக்கு முதற்கண் நன்றி கூறுகிறேன்,இது நுனிப்புல் மேயும் அதி மேதாவி இயக்குனர் எடுப்பதைப் போன்ற ஒரு படைப்பல்ல, நூறு புத்தகம் கொடுக்கக்கூடிய ஒரு தாக்கத்தை ஒரு சில திரைப்படம் கொடுக்கக்கூடும், அது போல ஒரு தீர்க்கமான படைப்பு இது.  சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறை காலம் காலமாக கலாச்சாரம், பண்பாடு, நீதி சாஸ்திரம் மண்ணாங்கட்டி இவற்றால் வரையறுக்கப்பட்டு, பெண் குழந்தைகளும், பெண்களும் போவோர் வருவோருக்கெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு சொல்லொணா துயரையும் கொடுமைகளையும் அனுபவித்து வந்துள்ளனர்.

த்தகைய பெண்கள் சந்தித்த பிரச்சனையை புடம் போட்டுக்காட்டும் காலக்கண்ணாடி இது, இப்படம் நிச்சயம் பயாஸாக எடுக்கப்பட்ட படம் அல்ல, வாழ்வில் அனைவரும் குறிப்பாக எல்லா ஆண்களும் காணவேண்டிய படம், இந்த விஞ்ஞான யுகத்திலும் பழமையும்,மூடநம்பிக்கையும் பேசி பெண்களை இழிவு செய்யும் ஒவ்வொரு அயோக்கியர்களையும் , க்ளாக் வொர்க் ஆரஞ்ச் என்னும் க்யூப்ரிக்கின் படத்தில் வருவது போல கைகால்களை கட்டிப்போட்டு, கண் இமைக்கவிடாமல் க்ளிப் போட்டு,சொட்டு மருந்து விட்டு  காட்ட வேண்டிய படம்.

தீபா மேத்தா
ம்பது வருடங்களுக்கு முன்பு வரை நடத்தப்பட்ட வைதீக முறை திருமணத்தில் ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம், உட்பிரிவு பார்க்கப்பட்டு மணமக்களுடைய  யோக்யதாம்சங்கள் புறம்தள்ளப்பட்டன. வைதீக முறை திருமணத்தில் வயதுவித்தியாசங்கள் மற்றும் மணம் செய்ய ஏற்ற பருவங்கள் முக்கியமாய் கவனிப்பட்டதேயில்லை எனலாம். தக்க பருவம் வருவதற்கு முன்பே பெண்களுக்குக் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். உதாரணம் என் பாட்டி, அவர்களின் 14 வயதில் என் 48 வயது விதவை தாத்தாவுக்கு ஏழ்மையின் காரணமாக இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டுள்ளார்.

ம்பது, அறுபது வயது ஆன ஆண் கிழத்துக்கு பத்து முதல் பனிரெண்டு வயது பெண் குழந்தையைப் பிடித்து தாலி கட்டி புகுந்தவீட்டுக்கு மனசாட்சியே இல்லாமல் அனுப்பியுள்ளனர். ஏனென்றால்?!!! திருமண விஷயத்தில் ஆண்களுக்குக் மட்டும் கிழம் என்பதே இல்லையாம்.என்ன கொடுமை சார்?!!!

ன்ன தான் ஆணாதிக்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மட்டுப்பட்டு பெண்களுக்கு சமத்துவம், இடஒதுக்கீடு என கிடைத்து அவர்கள் தலையெடுத்தாலும், இன்னமும் அது சுத்தமாக வழக்கொழியவில்லை,என்றே சொல்ல வேண்டியிருக்கிறது, நம் பரம்பரை மூதாதையர் ஜீன்கள் வழியே சிறிதளவேணும் அவ்வப்பொழுது அது வெளிப்படவே செய்கிறது, இது முற்றிலும் ஒழிய இன்னும் ஐம்பது ஆண்டாவது தேவைப்படும் என நினைக்கிறேன்.
=========0000=========
படத்தின் கதை:-
ந்த படம் 1938ஆம் ஆண்டு,சுதந்திரத்துக்கு முந்தைய ப்ரிட்டிஷ் இந்தியாவில் துவங்குகிறது, அப்போது வழக்கத்திலிருந்த பெண்ணடிமை தனத்தின் உச்சமாக, எட்டு வயது சிறுமி ச்சுய்யா[சரளா]வுக்கு பால்ய திருமணம் நடைபெறுகிறது, திடீரென அவளின் கிழட்டு கணவன் இறந்தும் விடுகிறான், சிறுமிக்கு மரணித்தல் என்றாலே என்ன? என்று தெரியவில்லை,கரும்பு தின்று கொண்டிருக்கிறாள்,அவளிடம் போய் அவள் அப்பன் ,இன்று முதல் நீ விதவை என்கிறான்,அவள் சிரிக்கிறாள், 

வளுக்கு குடும்பத்தாரால் பொட்டழிப்பு, வளையல் உடைப்பு வலுக்கட்டாயமாக செய்விக்கப்பட்டு, மாட்டு வண்டியில் ஏற்றி அவள் காசி மாநகரின் ஒரு எழுபது வயதான, கொடுரமான மனம் கொண்ட மூதாட்டி மதுமதி வசம் உள்ள விதவைகள் மடத்தில் விடப்படுகிறாள். அங்கே ஏற்கனவே நிறைய கைம்பெண்கள், சென்ற ஜென்மத்தில் தாங்கள் செய்த பாவம் தான் தன் கணவனின் உயிரை குடித்தது. என்றும் , அதை போக்க தினமும் கங்கையில் மூழ்கி எழுந்து ,ஒருவேளை மட்டுமே உப்பு,உறைப்பில்லாமல் உண்டு, தலையை சிரைத்தும், முக்காடு இட்டுக் கொண்டும் கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றனர்.

வளையும் அவ்வாறு மாற கட்டாயப்படுத்தியவர்கள், இவள் கேட்ட கேள்விகளால் திக்குமுக்காடி தோற்றும் போகின்றனர்.என்ன கேட்டாளா? !!! கணவணிழந்த பெண்கள் விதவைகள், என்றால் மனைவியை இழந்த கணவர்களுக்கு என்ன பெயர்?!!! அவர்களின் மடம் எந்த தெருவில் இருக்கிறது,?  என்று..:)) தவிர சிறுமி ச்சுய்யாவுக்கு குறும்புத்தனமும், ஈகைக்குணமும் நிரம்பவே உண்டு.

ங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க ஆச்சாரமான விதவை சகுந்தலா [சீமா பிஸ்வாஸ்] , தலைமைப் பெண் மதுமதிக்கு , அடுத்த ஸ்தானத்தில் இருக்கிறாள், ஆனால் நல்லவள், இவளும் பெண்ணடிமை தளையிலிருந்து வெளியே வருவதும், கைம்பெண்ணின் மறுமணமும்  பாவம் என்றிருக்கிறாள். ச்சுய்யாவின் களங்கமற்ற பேச்சும் செய்கையும் இவளுக்குள் இருக்கும் கண்டிப்பான குணத்தையும் மெல்ல கரைக்கிறது.கங்கைக்கரை படித்துறையில் தினமும் நடக்கும் பிரசங்கங்களில் கலந்து கொண்டும் உபன்யாசிக்கு சேவை செய்துகொண்டும் தன் நாட்களை கழிக்கிறாள்.

ச்சுய்யா அடுத்ததாக மிகவும் பாசத்துடன் இருப்பது,அழகிய இளம் கைம்பெண் கல்யாணியிடம் [லிசா ரே] தான், கல்யாணி  ஒளித்து வளர்க்கும் நாய்குட்டியான காலாவும் இவளுக்கு பிடிக்கும். விளையாட்டு சாமான்கள் பிடுங்கப்பட்ட அவளுக்கு காலாவே விளையாட்டு தோழன். 

துமதி, கல்யாணியின் சிறு வயதிலேயே கங்கையின் எதிர் க்கரையிலிருக்கும், அலகாபாத்தின் பணக்கார பிராமணர்கள் வசமும், ஜமீந்தார்கள் வசமும்  உடலுறவுக்கு கூட்டி கொடுத்து காசு பார்க்கிறாள். கேட்டால் மடத்தின் செலவுக்கும் வாடகைக்கும் என்கிறாள். கல்யாணிக்கோ , உறவினர் இருந்தும் திரும்பிப்போகமுடியாத சூழ்நிலை. அக்காலத்தில் பெண்கள் விதவையானாலே, வீட்டுக்கு தரித்திரம், பெண் குழந்தைகளே சுமை, என்றே ஏனைய பெற்றோர்கள் இருந்தமையால், கல்யாணிக்கு மடமே சாஸ்வதம் என்றாகிப்போனது.

கிழவி மதுமதி பொன்முட்டையிடும் வாத்தான கல்யாணியை மடத்தின் மேல்தளத்தில் தனி அறை கொடுத்து தங்கவைத்துள்ளாள். மதுமதிக்கு குலாபி[ரகுவீர் யாதவ்] என்னும் திருநங்கையிடம் தீரா நட்பும் உண்டு, கல்யாணியை வாடிக்கையாளர்களிடம் கூட்டிக்கொடுத்து, பின்னர் படகில் கூட்டி வரவும் , கஞ்சா வாங்கி பற்ற வைத்துத் தரவும், பொறித்த, தாளித்த பண்டங்களை விதவைகளுக்கு கடைக்காரர்கள் விற்கமாட்டார்கள்,ஆகவே அதை வாங்கி வந்து தரவும்  இந்த குலாபி பேருதவியாக இருக்கிறாள்.

கூட வசிக்கும் ஏனைய விதவைக்கிழவிகள் கல்யாணியை மிகவும் வெறுக்கின்றனர், அவளின் மொட்டையடிக்கப்படாத தலையும், வசீகரிக்கும் மேனி எழிலையும் கண்டு வயிறெரிந்தவர்கள், அவளுடன் அமர்ந்து சாப்பிடுவதையும், பேசுவதையும், முற்றாக தவிர்க்கின்றனர், இருந்தும் நாய் விற்ற காசு குரைக்காது என்னும் கூற்றுக்கேற்ப, அந்த காசில் வாங்கி வந்த மளிகையில் அனுதினம் தளிகை பொங்கி தின்கின்றனர்.

ங்கே இருக்கும் விதவைகள் விஷேஷகாலங்களில் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்து, அதில் வரும் காசுகளை,தங்கள் இறுதிச்சடங்கிற்கு சேர்த்தும் வைக்கின்றனர். சிறுமி சுய்யாவுக்கு  பிச்சை எடுக்க பிடிக்கவில்லை, ஆனால் மிகவும் பசி எடுக்கிறது, ஆனால் சிறுமி என்றும் தாட்சன்ய்ம் காட்ட மடத்தில் யாருக்குமே  மனமில்லை. அவ்வப்பொழுது ச்சுய்யா தன்னை அம்மாவிடம் கொண்டு விடுங்கள், என்று அடம் பிடிக்கும் போதெல்லாம், அங்கிருந்த மூத்த விதவைகளால் போலி வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஏமாந்தும் போகிறாள்.

வளை சொன்னபடி கேட்க வைக்கும் தந்திரமாக உன்னை அம்மாவிடம் கொண்டு விடுகிறேன் என்பதை எல்லோரும் பயன்படுத்துகின்றனர். ச்சுய்யாவும் அதற்கு பெட்டிப்பாம்பாய் அடங்குகிறாள். மடத்தில் உள்ள 80வயது விதவை மூதாட்டி , சிறுவயதிலேயே தனக்கு நடந்த திருமணத்தில் நெய்யில் செய்த லட்டு, ஜாங்கிரி தின்றவர்,அதன் பின்னர் கணவன் இறந்த பின்னர் 70 வருடமாக இனிப்பே சாப்பிடவில்லை, வருவோர் போவோரிடமெல்லாம் லட்டைப்பற்றியும், ஜாங்கிரியைப் பற்றியும், அதன் மணம் சுவையை கண்கள் விரிய சிலாகித்து பேசுகிறார், எல்லோரும் அவளுக்கு இனிப்பு கிறுக்கு என்கின்றனர். ச்சுய்யாவிடமும் பாட்டி கேட்கிறாள்.

னால் மடத்தில் ஒருவரும் பாட்டிக்கு  எந்த இனிப்பும், இதுவரை வாங்கித்  தரவில்லை. ஒரு நாள் கோவிலில், ச்சுய்யாவுக்கு  ஒரு பெண்மணி ஒரு அணா  பிச்சையிட, உடனே இனிப்பு கடைக்காரனிடம் ஓடியவள், அவன் முதலில் விரட்ட, என்னிடம் காசு உள்ளது என்று எடுத்து நீட்ட, அவன் தந்த லட்டை கொண்டு போனவள். அந்த கூன்போட்ட விதவை மூதாட்டியிடம் தூங்கும் போது வாசம் காட்டி, பின்னர் உள்ளங்கையில் அழுத்துகிறாள். பாட்டி தான் கனவு காண்கிறோம்! என்றே நினைத்தவள். நா தழுதழுக்க லட்டை  மெல்ல அனுபவித்து தின்கிறாள், ஆனால் அதுவே அவளுக்கு கடைசி உணவாகிவிட ஆனந்தகூத்தாடியவள் புறைக்கேறி இருமியே போய் சேர்ந்தும் விடுகிறாள். படத்தில் பார்த்துப்பார்த்து எடுக்கப்பட்ட காட்சியில் இதுவும் ஒன்று.

றுநாள் பாட்டியின் ஈமைகிரியைக்கு பணம் தேவைப்பட, யாரிடமும் பணமில்லை, ஒருவரும் பாட்டிக்கு பணம் தர முன் வராதபோது, மதுமதி பாட்டியின் உடமைகளை சோதனையிட, ஒரு கிழிந்தபுடவையும், திருவோடும் கோப்பையும் மட்டுமே எஞ்சியுள்ளது. இறந்துபோன பாட்டியை மதுமதி கண்டபடி திட்டத்துவங்க, கல்யாணி தன் இறுதிச்சடங்கிற்கு வைத்திருந்த பணமுடிப்பை மதுமதியிடம் விரைந்து தருகிறாள், இவளை பார்த்து மதுமதி மகாலட்சுமி என்கிறாள்.

ழகிய கல்யாணி கங்கையில் ச்சுய்யாவுடன் நீராடி வரும்பொழுது செல்வந்தரும், இளம் காந்தியவாதியுமான நாராயணின் [ஜான் ஆப்ரஹம்] கண்களில் பட, அவருக்கு கல்யாணி மேல் அன்பும் , இரக்கமும், ஒருங்கே தோன்றுகிறது, அது விரைவில் காதலாகவும் கனிகிறது, குப்பையிலிருக்கும் கோமேதகத்தை திருமணம் செய்து உயர்ந்த வாழ்க்கை அளித்து, துயர் துடைக்க நினைக்கிறார், இவர்களுக்கு பார்வையிலேயே காதல் பூக்கும் காட்சி இசைப்புயலின் இசையுடன் அமர்க்களமாக வெளிப்பட்டிருக்கும்.


கல்யாணி மதுமதியிடம் இனி வாடிக்கையாளர்களின் உடல்பசி தீர்க்க தன்னால் போக முடியாது, தனக்கு உடம்பு சரியில்லை, என்கிறாள், மதுமதி தந்த புதிய புடவையையும் வாங்க மறுக்கிறாள். தேசமெங்கும் ,மகாத்மா காந்தி பெண்ணுரிமை குறித்தும் விதவைகள் மறுமணம் குறித்தும் சுதந்திர தாகத்துடன் சேர்த்து ஒவ்வொரு கிராமமாக சென்று , தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கல்யாணிக்கு விதவைகளை சமமாக நடத்தும் சமதர்ம சமுதாயம் ஏற்படப்போகிறது, தங்களுக்கும் புணர்வாழ்வு கிடைக்கப்போகிறது என்னும் எண்ணமே மிகுந்த பூரிப்பைத் தர. இன்னும் அழகாகிறாள்.

ல்யாணி சகுந்தலாவிடம் சென்றவள்.  நாராயன் ச்சுய்யாவிடம் தந்த கடிதத்தை தந்து படித்து காட்டச்சொல்லி கேட்கிறாள் , நாராயண் தனிமையில் சந்திக்க சொல்லி கேட்பதாக சொல்கிறாள்,நான் அவரை சென்று சந்திக்கவா? என்று கல்யாணி பயந்தபடி அனுமதி கேட்க, அவள் உன் உள்மனதுக்கு என்ன தோன்றுகிறதோ?!!! அதை செய் என்கிறாள்.அருமையான மற்றொரு காட்சி இது.

முதலில் நாராயணை சந்திக்கவும் பேசவும், பயந்து மறுத்த கல்யாணி, சிறு வயதிலிருந்தே தான்  அனுபவித்து வரும் விருப்பமில்லா,வன்புணர்ச்சியினால் அவளின் மனமும் கல்லாயிருக்க,  கண்ணியமான நாரயணின் கருணையினால் அது கரைகிறது,குதிரை வண்டி சந்திப்பின் போது.  நாராயண் கல்யாணிக்கு முதலில் எழுத்தறிவிக்க விரும்புவதாக சொல்கிறார் . செல்வந்தரான அப்பா,அம்மாவின் எதிர்ப்பையும் மீறி இவளை திருமணம் செய்து, கல்கத்தா அழைத்துப்போக எண்ணுகிறார். தன் அம்மாவையும் சம்மதிக்க வைத்து விடுகிறார். கல்யாணி மகிழ்ச்சி பொங்கிட ச்சுய்யாவுக்கு மட்டும் இதை ரகசியமாய் சொல்கிறாள், ச்சுய்யா மிகவும் ஆனந்தமடைகிறாள்.

ன்று, வழக்கம் போல குண்டுக்கிழவி மதுமதிக்கு, ச்சுய்யா கால் வலிக்கு மிதிக்கையில், ஜன்னல் வழியே குலாபி தந்த பூரி பொட்டலத்தை மறுத்த  மதுமதி, தான் காலையிலிருந்து கெட்டவாயுவாக வெளியேற்றுவதாகவும், நேற்று தின்ற எண்ணைய்ப் பண்டம் ஒத்துக்கொள்ளவில்லை, எனக்கு இன்று பூரி வேண்டாம் என்கிறாள்,

ச்சுய்யா அதை சாப்பிட ஆவலாய் கேட்க, குலாபி மறுத்து விதவைகள் எண்ணெய் பண்டம் தின்றால் பாவம், கணவன் ஆத்மா சாந்தியடையாது, இன்னும் ஏழு ஜென்மம் விதவையாகவே எடுத்து கழிப்பாய் என சொல்ல!!!! மதுமதியும் கரித்துக் கொட்ட, ச்சுய்யா நீ என்ன தருவது?.கிழவி, நடக்கப்போகும் கல்யாணியின் திருமணத்தில் நான் நெய்யில் செய்த லட்டுக்களும் ஜிலேபிகளும் வகை வகையாக தின்னப்போகிறேன், ஆனதைப்பார். என்கிறாள்.

துமதி கிழவி நிலம் அதிர எழுந்தவள், தின்னமுடியாமல் தின்று வளர்த்த தன் உடம்பை,தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு கல்யாணியின் அறைக்கு சென்று, ச்சுய்யா சொல்வது,உண்மையா? எனக்கேட்டவள், அவள் ஆம் என்றதை தாங்கமுடியாமல், அவளின் அழகிய கூந்தலை அரைகுறையாக ,அவசரமாக, அசிங்கமாக கத்தரிக்கிறாள், அவளை அறைக்குள்ளேயே வைத்து பூட்டுகிறாள். இதைக்கண்ட சகுந்தலாவுக்கு மனதை பிசைகிறது, ஆனால் மதுமதி அங்கேயிருந்த மூடப்பழக்கங்களில் ஊறிய விதவைகளிடம், விதவையின் மறுமணத்துக்கு உதவினால் நீங்களும் நானும் ஏழு ஜென்மத்துக்கு நரியாக பிறப்பெடுத்து ஊளையிட வேண்டியிருக்கும், என்று பூச்சாண்டி காட்டுகிறாள்.

துமதியின் கயவாளித்தனத்துக்கு ஒருபோதும் சகுந்தலா துணைபோனதில்லை, அதனால் தான் , சிறுமியாருந்த கல்யாணியை, யாருக்கும் தெரியாமல் குலாபியின் துணையோடு கூட்டிக் கொடுத்தாள் மதுமதி,  இதுவரை, மதுமதியை எதிர்த்து பேசியதுமில்லை, ஆதரித்ததுமில்லை.  நாராயண் நல்லவர் என்பது மட்டும் தெரியும். அழகிய கல்யாணிக்கு இந்த மடம் ஒரு கொடிய நரகம் என்றும் தெரியும். இனி சகுந்தலா என்ன முடிவெடுப்பாள்?!!!


1.சகுந்தலா கல்யாணியை விடுதலை செய்தாளா?
2.கல்யாணியும் நாராயணும் இணைந்தார்களா?அதற்கு அவர்களின் செல்வந்தர் குடும்பம் சம்மதித்ததா?
3.சிறுமி ச்சுய்யா என்ன ஆனாள்?பெற்றோரிடம் இணைந்தாளா?
4.விதவைகள் மடம் பூரணமாக கலைக்கப்பட்டதா? சகுந்தலா என்ன ஆனாள்? போன்றவற்றை படத்தின் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் டிவிடியில் பாருங்கள்.
=====0000===== 

 படத்தின் கதாபாத்திரங்களின் அற்பணிப்பை பற்றி பேச ஒரு பதிவு போதாது, அழகிய கைம்பெண் கல்யாணியாய் வந்த லிசா ரே [ஆம்! ஐ லவ் இந்தியா ] தன் கலைவாழ்வில் செய்த மாபெரும் பங்களிப்பு, இதில் நடிக்கும் போதே இவருக்கு புற்று நோயும்  இருந்திருக்கிறது, அந்த வேதனையும் பாத்திரத்துக்கு  மேலும் பலமூட்டியிருக்கும்  போலும்.

டத்தில் இசைப்புயலின்  இசை மனதை உருக்கிவிடும்., இதில் பிண்ணணி இசைக்கோர்வைக்காக மைக்கேல் டன்னா[மான்சூன் வெட்டிங்]வும் இசைப்புயலுடன் இணைந்திருப்பார். இருவரும் இணைந்தே உலகத்தரம் வழங்கியிருப்பார்கள். படத்தின் ஆர்ப்பரிக்கும் ஒளிப்பதிவு கைல்ஸ் நட்ஜென்ஸ், இவர் தீபா மேத்தாவின் ஆஸ்தான கேமராமேனாவார்.அழகிய காசி மாநகரை கங்கை நீரை அள்ளி வந்திருப்பார் தன் கேமராவில்!!!. உலக சினிமா காதலர்கள் தவறவிடக்கூடாத படைப்பு இந்தஎலிமண்ட்ஸ் ட்ரைலாஜி.

No comments:

Post a Comment