Thursday, December 22, 2011

சேகர்கபூரின் இந்திய காமிக்ஸ்.

இரும்புக்கை மாயாவி, வேதாளம்,டின்டின், என்று காமிக்ஸ் புத்தகங்களை தேடித் தேடி படித்தவன் நான். இன்றைக்கும் அந்த ஆர்வம் குறையவேயில்லை.


சென்னை புத்தக கண்காட்சியில் ஐம்பதுக்கும் அதிகமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வந்து இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன்.


சில மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக சாது என்ற புதிய காமிக்ஸ் புத்தகத்தை லேண்ட்மார்க்கில்  வாங்கி வந்தேன். மிகசிறப்பாக இருந்தது.  யார் இதை உருவாக்குகிறார்கள் என்று தேடிப் படித்த போது  பிரபல திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் தான் இந்த காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடுகிறார். அவரே சில காமிக்ஸ் புத்தகங்களின் கதைகளை எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.


அவரோடு ரிச்சர்டு பிரான்சன், எழுத்தாளர் தீபக் சோப்ரா  இணைந்து வர்ஜின் காமிக்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி புதிது புதிதாக காமிக்ஸ் புத்தகங்களை கொண்டு வருகிறார்கள் .


32 பக்கங்கள் முழுமையான வண்ணப்படங்களுடன் வெளியாகிறது வர்ஜின் காமிக்ஸ். இதில் பல்வேறு கதைவரிசைகள் உள்ளன. குறிப்பாக தேவி, சாது, ராமாயண்3392, கல்கி, புத்தா, சிவா, நாகப்பெண், பஞ்ச தந்திரா என்று இருபதிற்கும் மேற்பட்ட கதைவரிசைகள் வெளியாகின்றன.


சேகர் கபூர் எலிசபெத் திரைப்படத்தின் மூலம் உலகின் கவனத்தை பெற்றவர். எட்டு ஆஸ்கார் விருதிற்கு பரிந்து செய்யப்பட்டது எலிசபெத். முன்னதாக அவர் இயக்கிய பேண்டிட் குயின் பூலான் தேவியின் வாழ்க்கையை மையமாக கொண்டது. உலகப்படவிழாக்களில் விருதுகளையும் சிறந்த பாராட்டையும் பெற்றது. நெல்சன் மண்டேலா பற்றிய படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார் சேகர்கபூர் என்றொரு செய்தியும் வாசித்திருக்கிறேன்.


அவரும் சிறுவயதில் இருந்து அமர்சித்ர கதா, காமிக்ஸ் புத்தங்களின் மீது தீராத விருப்பம் கொண்டிருக்கிறார் என்பதை அவரது குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது. பரபரப்பான தனது திரைப்பட வேலைகளுக்கு நடுவில் இது போன்று காமிக்ஸ் கதைகளுக்கு கவனம் செலுத்த முடிவது வரவேற்க படவேண்டிய முயற்சி.


சென்ற ஆண்டு தமிழ்காமிக்ஸ் வாசகர்கள் அமைப்பு ஒன்றினை உருவாக்கி அதற்கான சிறப்பு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள என்னை நடிகர் பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் அழைத்திருந்தார்கள். அதில் ஒவியர் டிராஸ்கி மருது ,இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொண்டார்கள். மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நண்பர்களை சந்திக்க முடிந்தது. அதில் கிடைத்த சில காமிக்ஸ் நண்பர்களின் நட்பு இப்போதும் தொடர்கிறது.


வர்ஜின் காமிக்ஸ் சம்பிரதாயமான காமிக்ஸ் வடிவத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது. சமீபமாக ஜப்பானில் வெளியாகி வரும் மாங்கா போன்ற காமிக்ஸ் வடிவங்களுக்கு நிகரானது. இந்த வரிசை காமிக்ஸ் புத்தங்களின் தனிச்சிறப்பு அதற்கு வரையப்படும் ஒவியங்களும் அதன் சட்டகமும் . இந்த இரண்டும் சேகர் கபூரின் காமிக்ஸ் வரிசையில் தனித்துவமாக உள்ளது. குறிப்பாக வண்ணங்களை பயன்படுத்தும் விதமும் கதாபாத்திரங்களின் தோற்றங்களில் காணப்படும் உணர்ச்சி வெளிப்பாடும் அற்புதமானது.


இந்திய புராணங்களை முற்றிலும் புதிய கதைசொல்லும் முறையின் வழியே நவீன காமிக்ஸ் புத்தகங்களாக உருவாக்குவதே இவர்களின் பிரதான நோக்கம். அந்த வகையில் ராமாயணத்தை எதிர்காலத்தில் நடைபெறும் விஞ்ஞானபுனைகதை போல ராமாயண் 3392 என்று மறுகதை சொல்லல் வழியே புத்துருவாக்கம் செய்திருக்கிறார்கள். ராமனின் தோற்றமும் கதை நிகழும் களமும் வியப்பூட்டுகின்றன. நாம் அறிந்த ராமாயணக்கதையை இத்தனை நவீனமாக மாற்றமுடிகிறது என்பது ஆச்சரியமூட்டுகிறது.


அது போலவே முதல் இந்திய சுதந்திர போரின் பின்புலத்தில் நடைபெறும் சாது என்ற காமிக்ஸ் வரிசை. .இந்திய பெண்கடவுளான தேவியை மையமாக கொண்டு புதிய கதைகளத்தில் நடைபெறும் சாகசங்களான காமிக்ஸ், பாம்புப் பெண் என்ற நாகதேவதையை பற்றிய காமிக்ஸ் , சிவா என்று புராணகால சிவனின் சக்திகளை கொண்ட அதி நவீன கதாபாத்திரம் என்று வர்ஜின் காமிக்ஸ் இந்திய கதை சொல்லும் முறைக்கு புதிய சாளரத்தை திறந்து வைத்திருக்கிறது.


2008 ல் இருந்து வெளியாகும் இந்த காமிக்ஸின் விலை ஐம்பது முதல் நூற்றிஇருபத்தைந்து வரை உள்ளது.



ஹாலிவுட்டின் அதிரடி ஆக்சன் படங்களை இயக்கிய ஜான் ஹø சேகர் கபூருக்காக ஒரு காமிக்ஸ் புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். இது போலவே ஹாலிவுட் நடிகரான நிகோலஸ் கேஜ் சாது என்ற காமிக்ஸ் கதாபாத்திரத்திற்கு உருமாதிரியாக தோற்றம் தருகிறார்



பேட் மேன் சூப்பர்மேன் ஸ்பைடர் மேன்களுக்கு போட்டியாக இந்திய சாகச கதாபாத்திரங்களை உருவாக்கிவரும் சேகர்கபூருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது சோனி நிறுவனம் அவருடன் இணைந்து இந்த காமிக்ஸ் கதையை வீடியோ விளையாட்டாக  மாற்றுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதுபோலவே ராமாயன் 3392 கதையை படமாக்கவும் ஹாலிவுட்டில் கையெப்பம் ஆகியுள்ளது.



புத்தரின் வாழ்க்கை வரலாற்றை காமிக்ஸ் புத்தகமாக வெளியிடுகிறது வர்ஜின் நிறுவனம். தீபக் சோப்ரா இதை எழுதியிருக்கிறார். இது போலவே உலகம் அழியப்போகும் மகாபிரளயத்தை பின்புலமாக கொண்டு காமிக்ஸ் புத்தகம் உருவாக்கபட்டு வருகிறது.



வர்ஜின் காமிக்ஸ் தற்போது லிக்யூட் காமிக்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதன் நிர்வாக அமைப்பும் விநியோகமும் மாற்றம் செய்யபட்டிருக்கிறது. ஆகவே எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் சென்னையில் கிடைப்பதில்லை.


ஆனால் பெங்களுரிலும் மும்பையிலும் இவை எளிதாக கிடைக்கின்றன. ஆன்லைனில் கிடைப்பதாக சில நண்பர்கள் தெரிவித்தனர்.


இந்தியாவிலிருந்து உருவாகி வரும் காமிக்ஸ் புத்தங்களில் தனித்து குறிப்பிடப்பட வேண்டியது சேகர் கபூரின் இந்த காமிக்ஸ் வரிசை. தமிழில் புதிதாக காமிக்ஸ் உருவாக்க நினைப்பவர்களுக்கான முன்மாதிரியாக இதை கொள்ளலாம்.


தமிழில் உள்ள மயில்ராவணன் கதை மற்றும் அல்லி ராஜ்ஜியம், பரமார்த்த குருவும்சீடர்களும்,  பட்டி விக்ரமாதித்யன் கதைகள் போன்றவை காமிக்ஸ் புத்தகங்களாக மாற்றுவதற்கு எளிதான கதைகள். வியப்பூட்டும் தனியான புனைவுலகம் கொண்டவை.


இந்தியா ஆதிநாட்களில் இருந்தே கதை சொல்வதில் முன்னோடியான நாடு. நம்மிடமிருந்தே கதை சொல்லும் கலை பலநாடுகளுக்கு சென்றிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து பஞ்சதந்திர கதைகள் பலநாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றன. பஞ்சதந்திர கதைகளின் மூலத்தை ஆராயும் போது அந்த கதைகளின் அதே மாதிரியை கொண்ட கதைகளாக பெர்சியாவில் காணமுடிகிறது. பஞ்ச தந்திரம் நான்காம் நூற்றாண்ட்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சரித்திர ஆசிரியர்கள் வகைப்படுத்துகிறார்கள்.


 யாத்ரீகர்களின் வழியே இந்த கதைகள் தேசம் விட்டு தேசம் கடந்து சென்றிருக்கின்றன. பத்தாம் நூற்றாண்டில் பஞ்ச தந்திர கதைகள் பெர்சியாவில் வெளியாகி உள்ளது. அங்கிருந்து கிரிஸ் ஸ்பெயின், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக் சென்று வெவ்வேறு வடிவம் கொண்டிருக்கின்றன. சில கதைகள் சற்றே மாற்றத்துடன் வெளிநாட்டு பயணிகளின் வழியே இந்தியாவிற்கு திரும்பி வந்திருக்கின்றன



இப்படி கதைகளின் தொடர்ச்சியான பயணம் நம் காலத்தில் தான் தேங்கி போய்விட்டது. இந்திய மரபுகதை சொல்லும் முறைகள் பெரிதும் கைவிடப்பட்டுவிட்டன.


ஒருவகையில் இது போன்ற காமிக்ஸ் முயற்சிகள் அதை மீள்உருவாக்கம் செய்கின்றன. காமிக்ஸ் குழந்தைகளுக்கு மட்டுமானது என்ற தவறான எண்ணம் பலரிடமும் உள்ளது. உண்மையில் காமிக்ஸ் வயது வரம்பற்றது. காமிக்ûஸ வாசிக்கும் போது வாசகன் தன் குழந்தை பருவத்தின் குதூகலத்திற்கு வியப்பிற்கு உள்ளாகிறான் என்பதே நிஜம்.


***

No comments:

Post a Comment